செஞ்சிக்கோட்டை சுற்றுலா தளமாக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்
செஞ்சிக்கோட்டை
செஞ்சிக்கோட்டை விரைவில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும் என்று செஞ்சியில் நடைபெற்ற மரபு நடை விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செஞ்சிக்கோட்டையில் பாரம்பரியத்தை உணர்த்தும் மரபு நடை விழா தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சகாய் மீனா முன்னிலை வகித்தார்.
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்கள் பாடுபட வேண்டும் என்று முதல்வர் கூறியதற்கு இணங்க நம்முடைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அயராது பாடுபட்டு அனைத்து திட்டங்களையும் மக்களை சென்றடைய செய்து வரும் அவரை மனதார பாராட்டுகிறேன்.
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தினை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கே இந்த சுற்றுலா மரபு நடை விழா நடத்தப்படுகிறது. சனிக்கிழமை முதல் வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்த்து பயன் பெறலாம். மேலும் அவர்கள் புகைப்படங்கள் எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், 14-ந் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் சிறந்த 100 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, புகைப்படம் எடுத்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். செஞ்சிக்கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசால் செஞ்சிக்கோட்டை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். விழாவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம், சிலம்ப போட்டி, மல்லர்கம்பம், மல்லர் கயிறு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சாரண இயக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு செஞ்சிக்கோட்டை உச்சி வரை ஏறி கோட்டையில் உள்ள அதிசயங்களை கண்டு களித்தனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தாசில்தார் நெகருன்னிசா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா தொடர்ந்து வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிலம்ப போட்டி செஞ்சிக்கோட்டையில் நடைபெற்ற மரபு நடை விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu