விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை, செல்போன்கள், கத்திகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பிரகாஷ், பாஸ்கர், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், கொள்ளை கும்பல் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிப்பாடி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருவண்ணாமலை போளூர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா என்கிற ராக்கி (வயது 25), திருவண்ணாமலை சிவசக்தி நகரை சேர்ந்த ராஜா மகன் அருணாச்சலம் என்கிற ஷீல்டு (25), ஊத்துக்கோட்டை சாலையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் கலையரசன் (20), பாச்சல் பகுதியை சேர்ந்த சந்திரகேசன் மகன் வீரமணி (19) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து விழுப்புரம், காணை, திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, கஞ்சனூர், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர், போளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாலை வேளையில் சாலைகளில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் நகைகள், பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் இவர்கள் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவா, அருணாச்சலம், கலையரசன், வீரமணி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2½ பவுன் நகைகள், 6 செல்போன்கள், 2 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு வழிப்பறி ஆகியவற்றால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது தொடர் வழிப்பறித் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தது மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இதே போன்று தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu