திமுக மீது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் குற்றசாட்டு

திமுக மீது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் குற்றசாட்டு
X

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சண்முகம்

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு எழுப்பினார்

முன்னாள் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை பழிவாங்குவதையே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (3/12/2021) ஆலோசனை நடத்திய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றாலும் இதுவரை மர்மதேசம் போலவே ஆட்சி நடக்கிறது. ஆட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே யாருக்குமே தெரியவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எதிர்கட்சிகளை குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே இலக்காக கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க மறுக்கும் உயர் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டுகிறது. அவ்வாறு அடிபணியாத அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி அச்சுறுத்தப்படுகின்றனர்.

அதுபோல தான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்துக்கும் அச்சுறுத்தல் கொடுத்தததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சட்ட ரீதியாக சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. திமுகவை சேர்ந்த 15 அமைச்சர்கள் மீது இப்போதும் சொத்து குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்ற பேரவைத் தேர்தலின்போது திமுக அதிமுகவுக்கு இடையே வாக்கு வித்தியாசம் 3 சதவீதம் தான். அதாவது அது 15 லட்சம் வாக்குகள் தான். தமிழகத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பம் சார்ந்த வாக்குகள் 60 லட்சம் உள்ளன. இதில் பெரும் பகுதி திமுகவுக்கு தான் வாக்களித்தனர். அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் செய்து திமுகவை அரியணையில் ஏற்றிவைத்த அரசு ஊழியர்கள் மீதே திமுக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமியை, முதல்வர் ஸ்டாலின் தவறாக பயன்படுத்தி வருகிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலர் என குறிப்பிட்டு தொடர்ந்து சசிகலா அறிக்கைவிட்டு வருகிறாரே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை பற்றி எல்லாம் பேசி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை என பதில் அளித்தவாறே சென்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!