பெண் ஐ.பி.எஸ்.பாலியல் தொல்லை: இறுதி கட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி. வழக்கு

பெண் ஐ.பி.எஸ்.பாலியல் தொல்லை: இறுதி கட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி. வழக்கு
X

விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (கோப்பு படம்)

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணையானது கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.இருவரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

சென்னை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் முடிந்ததும் அவரிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை விவரங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி14-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடங்கப்பட்ட கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 109 முறை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இதுவரை தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். அதோடு அந்த சாட்சிகளிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்களும் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள், குறுக்கு விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரிகளான சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இன்னும் ஒரு சிலரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இவ்வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால்,விழுப்புரம் நீதிமன்றம் மட்டும் இன்றி தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கின் தீர்ப்பை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறை எதிர்பார்த்து வருகிறது, இந்த வழக்கின் தீர்ப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று விழுப்புரம் நீதிமன்ற வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!