நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
X

விழுப்புரத்தில்  மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு முகாமில் பங்கேற்ற விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், விழுப்புரம் பானாம்பட்டு- பில்லூர் இடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாற்றம் கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இன்னும் பட்டா மாற்றம் செய்து தரப்படவில்லை.அவற்றை விரைந்து வழங்க வேண்டும்.

அணைக்கட்டுகளை சீரமைக்க.. மாவட்டத்தில் சேதமடைந்த எல்லீஸ் சத்திரம், தளவானூர், சொர்ணாவூர் ஆகிய அணைக்கட்டுகளின் தற்போதைய நிலவரம் என்ன,எல்லீஸ்சத்திரம் தடுப்பணை உடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் பற்றாக் குறை உள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டில் கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும்.குடி மராமத்து திட்டப்பணிகள் 38 ஏரிகளில் முழுமையாக முடிந்த நிலையில் அந்த ஏரிகளில் முள்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை விரைந்து அகற்ற வேண்டும்.

கிராமப் புறங்களில் சேகரிக்கும் குப்பைகளை பயோ கம்போஸ் உரமாக மாற்றி கிராம விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை சரிவர செயல்படுவதில்லை. விக்கிரவாண்டி, செஞ்சி வட்டங்களில் வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை விரைந்து நிரப்ப வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து ஆட்சியர் மோகன் பேசுகையில், எல்லீஸ்சத்திரம், சொர்ணாவூர் புதிய அணைக்கட்டு அமைப்ப தற்கான பணிகள் அரசாணை வரும் நிலையில் உள்ளன. தளவானூரில் ரூ.56 கோடியில் புதிய தடுப்பணை அமைப்பது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, குடிமராமத்து திட்டப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டவை எவை, எங்கெல்லாம் முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளன போன்ற விவரங்களை எடுத்துரைக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டில் எந்தெந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இந்த ஆண்டிலும் திறக்கப்படும். முதல் கட்டமாக இம்மாத இறுதிக்குள் 35 இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படும். இதுதவிர விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து கூடுதலாகவும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!