இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கோரிக்கைகள் குறித்து பேசுகையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் இருப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரங்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிமராமத்து செய்யப்பட்ட ஏரிகளின் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அல்லாதோர் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவ்வாறு செயல்படும் இடைத்தரகர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். திண்டிவனம் பகுதியில் ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்து இல்லை என்கிறார்கள். போதிய மருந்தை வரவழைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்,
இதற்கு பதிலளித்து மாவடட ஆட்சியர் த.மோகன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாகவே உரம் இருப்பில் உள்ளது. அந்த உரங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு பின் நெல் பயிரிடாமல் மாற்று பயிர்களாக உளுந்து, மற்றும் பயிறுவகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். ஏனெனில் தேவைக்கு அதிகமாக நெல் உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே மாற்றுப்பயிரை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu