மாவட்டத்தில் வரத்து வாய்க்கால்களை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

மழைக்காலத்திற்குள் ஏரி நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசுகையில் ஆழாங்கால் வாய்க்காலில் உடைக்கப்பட்ட கலிங்கல் இன்னும் சரிசெய்யப்படவில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும், அதுபோல் வாய்க்காலுக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதியும் தூர்ந்து போயுள்ளதால் அதனை உடனடியாக தூர்வார வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் 200 அடி தூரத்திற்கு சுற்றிலும் கான்கிரீட் சுவர் எழுப்பி தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்ட ஏரிகளில் கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளன. உடனே அதனை அகற்ற வேண்டும்.
ஏரிகளில் கலக்கும் கழிவுநீர் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள மதுபான தொழிற்சாலையின் கழிவுகள் பொன்னேரியில் கலக்கிறது, அதுபோல் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மருதூர் ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால் ஏரி நீர் மாசுபடுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. இந்த கழிவுநீரை ஏரியில் விடாமல் வேறு எங்காவது விட வேண்டும். அல்லது சுத்திகரிப்பு செய்து அனுப்ப வேண்டும்.
கரும்பு பயிர் செய்வதற்கான கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், மழைக்காலத்திற்குள் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஏரிகளை உடனடியாக தூர்வார வேண்டும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வார வேண்டும்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு பல பேருக்கு இன்னும் உரிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. அந்த தொகையை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பம்பை ஆற்றின் மூலம் 50 ஏரிகள் நிறைகிறது. ஆனால் பம்பை ஆற்றை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அந்த ஆற்றுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல் ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்காலையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தூர்வார வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனை கேட்டறிந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இக்கூட்டத்தில் தாசில்தார்கள் ஆனந்தகுமார், இளவரசன், பிரபு வெங்கடேஷ், பாஸ்கரதாஸ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu