மாவட்டத்தில் உளுந்து விதை தட்டுப்பாடு: விவசாயிகள் புகார்
விழுப்புரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைந்தீர் கூட்டம்
விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 5 வட்டஙகளை உள்ளடக்கிய விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசுகையில், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கான பணம் பட்டுவாடா செய்வதில் ஒரு மாதம் ஆகிறது. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலைமை உள்ளது.விரைந்து பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தற்போது விதைப்பு பருவத்திற்கு தேவையான உளுந்து விதை தட்டுப்பாடு உள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் நடப்பு சாகுபடியில் உளுந்து விதைகள் அதிகம் தேவை இருப்பதால் போதுமான அளவு வேளாண்மை துறை இருப்பு வைத்திருக்க நடவடிக்கை வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள், வரத்து வாய்க்கால்களை மழைக்காலத்திற்கு முன்பு தூர்வார கோரிக்கை வைத்தோம். ஆனால் இதை சரிசெய்ய சரியான திட்டமிடல் இல்லாததால் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆனால் விழுப்புரம் கோட்டத்தில் கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் 2, 3 நாட்களுக்கு ஒருமுறைதான் கால்நடை மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் மாடுகளுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோட்டாட்சியர் ஹரிதாஸ், விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஒரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu