விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் நகரில் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
தமிழக வானிலை அறிவிப்பு படி விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர்,தொரவி, குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தொடங்கி அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடனும், பயங்கர இடி- மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை வரை லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து வானம் மேகமுட்டத்துடனேயே இருந்து வருகிறது.இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது.சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் மழையினால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது.
உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
காணை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையினால் ஆயந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் திண்டிவனம், வானூர், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, முகையூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu