விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி.
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), விவசாயி. இவர் இன்று தனது மகன் கதிர்வேல் (32), மருமகள்கள் சுகந்தி (30), கார்த்திகா (32) மற்றும் பேரக்குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்துசென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் கூறுகையில், எனது தந்தை அருணகிரி, அதே பகுதியில் வீட்டுமனையை கிரையம் செய்து அனுபவித்து வந்தார். அவருடைய மறைவுக்கு பின்னர் அவரது வாரிசான நான் அந்த வீட்டுமனையை அனுபவித்து வருகிறேன்.
திருவாமாத்தூர் வருவாய் கிராம எல்லையில் கிராம நத்தம் புதிய சர்வே எண்ணில் எனது தந்தை பெயரில் இருந்த மனை, எனது பெயருக்கு மாறிவிட்டது. அதன் பரப்பில் 72 அடி, யுடிஆரில் தவறுதலாக கிழக்கு மேற்கு பகுதியில் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது பத்திரத்தின்படி எனக்கு சேர வேண்டிய மனையின் அளவை கணினி சிட்டாவில் திருத்தம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu