திண்டிவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது..

திண்டிவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது..
X

ஏழுமலை.

Tindivanam News -போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 12 லட்சம் வாகன கடன் பெற்று மோசடி செய்த முன்னாள் மேலாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Tindivanam News -


மோசடிகள் பலவிதம் என்பது போல நாளுக்குநாள் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வாகனத்துக்கான ஆவணத்தை போலியாக தயார் செய்து அதன் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 12 லட்சம் கடன் பெற்று அந்தத் தொகையை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்த சம்பவம் திண்டிவனத்தில் அரங்கேறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மயிலம் தனியார் நிதி நிறுவன கிளையில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெயகண்ணன். அதே நிறுவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் மாதம் வரை கண்டமங்கலம் அருகே துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகரின் மகன் குமார் (வயது 34) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

அவர் பணியில் இருந்தபோது 10.10.2019 அன்று மயிலம் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (41) என்பவருக்கு டிராக்டர் டிப்பர் வாகனத்திற்கு ரூ. 12 லட்சத்திற்கு வாகன கடன் வழங்கினார். அந்த கடனை பெற்ற ஏழுமலை, சரியாக கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்தாராம்.

இதுதொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் ஏழுமலையிடம் கேட்டபோது, லாரி வாங்கி விற்கும் தொழில் செய்யும் திண்டிவனம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (47) என்பவர் மற்றும் அவரக்கு பழக்கமான மேலாளர் குமாரும் சேர்ந்து ஏழுமலை பெயரில் பெற்ற வாகன கடன் தொகை ரூ.12 லட்சத்தை பெற்று அந்த தொகையை நிதி நிறுவனத்திற்கு திரும்ப செலுத்தாமல் ஈஸ்வரனின் மகன் கோபிகண்ணனின் (25) வங்கி கணக்கிற்கு செலுத்தி கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.



இதுகுறித்து தற்போதைய கிளை மேலாளரான ஜெயகண்ணன், ஏழுமலையிடம் கேட்டுள்ளார். தற்போது அந்த வாகனம் எங்கு உள்ளது என்றும் வாகன கடனை திருப்பி செலுத்தும்படியும் ஜெயகண்ணன் கூறி உள்ளார். அதற்கு கடன் தொகையை செலுத்த முடியாது என்று ஏழுமலை கூறியதோடு ஜெயகண்ணனை அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ஜெயகண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீதும் துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தனியார் நிதி நிறுவன முன்னாள் மேலாளர் குமார் மற்றும் அவருக்கு தெரிந்த ஈஸ்வரன், தனது மகன் கோபிகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து ஏழுமலை கூட்டுசதி செய்து வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை போலியாக தயார் செய்து நிதி நிறுவனத்தை ஏமாற்றி வாகன கடனாக ரூ. 12 லட்சத்தை பெற்றது தெரியவந்துள்ளது.

இதையெடுத்து, தனியார் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஏழுமலை, குமார், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார் மூவரையும் சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!