கல்வி நிறுவனங்களை வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்

கல்வி நிறுவனங்களை வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு;  மாவட்ட ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் பழனி (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்புற எல்லைக்குட்பட்ட கல்வி நிறுவனங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களை, வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கல்வி நிறுவனங்கள் வரன்முறை நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, மேலும் 6 மாத காலம் காலநீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது. காலநீட்டிப்பு தற்போது இத்திட்டதின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக வரும் 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால், இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு, அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!