அதிமுக அரசின் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை : அமைச்சர் பெரிய கருப்பன்

அதிமுக அரசின் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை : அமைச்சர் பெரிய கருப்பன்
X

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், பொன்முடி

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நிறைவடைந்த பணிகளை பார்வையிட்டு, புதிய பணிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, கக்கனூர் கிராமத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்ட முறைகேடுகள் குறித்து, உரிய விசாரணை நடத்தி, விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் கூறுகையில், பெருநகரங்களுக்கு நிகராக, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதற்காக, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு, இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினர் சுயமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 273 ரூபாயாக உள்ள தினக்கூலி, விரைவில் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையில் செய்தியாளர் ஒருவர் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பதிலளித்துப் பேசுகையில், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பேருக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதை செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்றாகும். இந்தப் பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைத்ததை அனைவரும் விரும்புவார்கள். ஏனெனில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பது பாரம்பரியம் மிக்க, மிகப்பெரிய பல்கலைக் கழகம் ஆகும். அந்த வகையில், உயர் கல்வி வளர்ச்சிக்காக, பெயரளவில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத வகையில், உயர்கல்வித் துறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்

Tags

Next Story