விழுப்புரம் மாவட்டத்தில் ஊர் காவல்படை ஆள் சேர்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர் காவல்படை ஆள் சேர்ப்பு
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 

ஊர் காவல்படைக்கு ஆள் சேர்ப்பு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படஉள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விழுப்புரம் மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் திண்டிவனம் உட்கோட்டம் மற்றும் செஞ்சி உட்கோட்ட பகுதிகளில் உள்ள ஆண்களிடம் இருந்தும், விழுப்புரம் உட்கோட்ட பகுதியில் உள்ள பெண்களிடம் இருந்தும் 1.4.2023 முதல் 15.4.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், நல்ல உடற்தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், சமூக சேவையில் ஈடுபடுபவராகவும், தன்னார்வலராகவும் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். எந்தவொரு சாதி, மத, அரசியல் அமைப்புகளிலும் இல்லாதவராக இருக்க வேண்டும். அரசு ஊழியராக இருந்தால் அத்துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள், மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள். பணிபுரியும் நாட்களுக்கு தலா ரூ.560 வீதம் மாதம் ரூ.2,800 மதிப்பூதியம் வழங்கப்படும்.

தகுதியான திண்டிவனம், செஞ்சி உட்கோட்டங்களின் பகுதிகளில் உள்ள ஆண்களும், விழுப்புரம் உட்கோட்ட பகுதியில் உள்ள பெண்களும் வருகிற 15-ந் தேதிக்குள் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். விண்ணப்பங்கள் விழுப்புரம் ஊர்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.4.2023 என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!