கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா கொண்டாட்டம்

கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா கொண்டாட்டம்
X

கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கல்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா இன்று நடைபெற்றது.

விழாவில் காணை ஒன்றியக்குழுத் தலைவர் கலைச்செல்வி, பள்ளியின் மேலாண்மைக்குழுத் தலைவர் கல்விராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.,சி. அரசுப் பொதுத்தேர்வில் இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மேலும், பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவிகள், தேசிய திறனாய்வுத்தேர்வில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில், கல்பட்டு குடும்பத்தினர் சார்பில் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சம் காசோலை வழங்கினர். இத்தொகையை வங்கியில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் ஆண்டுதோறும் அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்க கேட்டுக்கொண்டனர். மேலும், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதிகளை ஏற்படுத்தி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், அரசுப் பொதுத்தேர்வு மையமாக இப்பள்ளியை அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் குழுப்பாடல், தனிப்பாடல், கவிதை வாசித்தல், குழு நடனம், சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலர் ஆர்.டி.முருகன், பள்ளித் தலைமை ஆசிரியர் அர.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!