வரி பாக்கி நிலுவைகளால், வளர்ச்சிப் பணியில் பாதிப்பு; திணறும் விழுப்புரம் நகராட்சி

வரி பாக்கி நிலுவைகளால், வளர்ச்சிப் பணியில் பாதிப்பு; திணறும் விழுப்புரம் நகராட்சி
X

வரி, வாடகை பாக்கி நிலுவையால், வளர்ச்சி பணிகளில் திணறும் விழுப்புரம் நகராட்சி அலுவலகம்.

விழுப்புரம் நகராட்சியில், வரி வாடகை உள்ளிட்ட பல்வேறு பாக்கிகள். அதிகளவில் நிலுவையில் இருப்பதால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, வளர்ச்சி பணிகளை செய்வதில் விழுப்புரம் நகராட்சியினர் திணறி வருகின்றனர்

தமிழகத்தில் வரிவசூலில், விழுப்புரம் நகராட்சி 135-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், வரிவசூல் நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சியில், மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இவ்வார்டு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சொத்துவரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட வரிகளின் மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், மக்களுக்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வரிவசூல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்கண்ட வரியினங்கள், வாடகை பாக்கி என நகராட்சிக்கு ரூ.17 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. ஆனால் வரிவசூலில் விழுப்புரம் நகராட்சி 135-வது இடத்தில் உள்ளது. மண்டல அளவில் 22 நகராட்சிகளில் 21-வது இடத்தில் இருக்கிறது. வரிவசூலில் விழுப்புரம் நகராட்சி பின்தங்கிய நிலையில் இருப்பதால், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் விழுப்புரம் நகராட்சி திணறி வருகிறது.

இந்தநிலையை சமாளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம், நகராட்சியில் வரிபாக்கியை முழுமையாக வசூலிக்க நகராட்சி அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அலுவலர்கள் கொண்ட குழுவினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து வரிபாக்கியை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி 42 வார்டுகளிலும் மொத்தமாக 11,391 குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் ரூ.2.18 கோடி வரிபாக்கி உள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை இணைப்புகள் மொத்தம் 6,024 உள்ள நிலையில் ரூ.1 கோடியே 67 லட்சம் வரிபாக்கி உள்ளது. இந்த வரியை விரைந்து கட்ட வலியுறுத்தியும், தவறினால் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இருப்பினும் வரிபாக்கியை குறித்த காலத்திற்குள் வழங்காமல் நிலுவை வைத்திருந்ததால், கடந்த சில நாட்களில் மட்டும் 130 குடிநீர் இணைப்புகளையும், 145 பாதாள சாக்கடை இணைப்புகளையும் அலுவலர்கள் துண்டித்துள்ளனர். இதேபோல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை பாக்கியை செலுத்தாமல் இருக்கும் கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 440 கடைகள் உள்ளன. இவற்றில் 320 கடைகளின் வியாபாரிகள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை செலுத்தாமல் ரூ.1 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். அந்த தொகையையும் வசூலிக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் அதிக வாடகை பாக்கி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத டீக்கடை, தின்பண்டங்கள் விற்பனை கடை என 2 கடைகள் பூட்டி சீல் வைத்தனர்,

இந்த நகராட்சி நடவடிக்கை மூலம் வரி மற்றும் வாடகை பாக்கி வைத்து உள்ளவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இதேபோன்று நடவடிக்கை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் எடுத்து வந்தால், விரைவில் பாக்கிகள் வசூலாகும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருத்துகள் நிலவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!