விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் போலீசுடன் வாக்குவாதம்: வீடியோ வைரலால் பரபரப்பு

விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் போலீசுடன் வாக்குவாதம்: வீடியோ வைரலால் பரபரப்பு
X

வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுக பிரமுகர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அண்ணா சிலை அவமதிப்பு குறித்து திமுக காவல்துறை இடையே மோதலாகும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மர்ம நபர்களால் தமிழகம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா திருஉருவ சிலை அவமதிக்கப்பட்டது. அப்போது இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க. பிரமுகரின் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை சிலர் அவமதிப்பு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சிலரை போலீசார் விடுவித்ததாக தி.மு.க.வை சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய பிரமுகர் ஒருவர், வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அண்ணாவின் சிலையை அவமதித்தவர்களை விடுவித்ததற்கு காரணம் என்ன, நாங்கள் ஆளுங்கட்சி என்பதால் அமைதியாக இருந்தோம், சர்வாதிகாரமாக நடக்கிறது போலீஸ் என ஆவேசமாக பேசினார்.

அதற்கு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைதியாக பேசும்படியும் கூறினார். அதற்கு நீ யார் என்று அப்பிரமுகர் கோபமாக பேசியுள்ளார். மேலும் அவருடன் வந்த தி.மு.க.வினரும் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அண்ணா திருவுருவ சிலை அவமதிப்பால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு வந்தது, அதனை போலீசார் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சுமூக நிலையை கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த திமுக பிரமுகர் போலீசார் உடன் அதே சம்பவத்தை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது மேலும் பிரச்சனையை மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகும் என அந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் திமுக இதில் தலையிட்டு இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ள கட்சியினுடைய கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என காவல்துறையும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் மத்தியில் செய்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பகுதி மக்களிடையே தற்போதும் ஒரு பதட்டமான நிலையே நீடித்து வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் தலைவரின் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!