தி.கவினர் துறவிகள், காவி அணிந்து மக்களை ஏமாற்றவில்லை: கி. வீரமணி
பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியாக திமுகவின் திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது என்றும் திகவினர் திராவிட துறவிகள் மக்களிடையே வாழுகின்றனர் ஆனால் சிலர் கவி அணிந்து பாஜகவில் மக்களை ஏமாற்றுகின்றனர் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில்,
2 முறை பிரதமராக உள்ள மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மீண்டும் பிரதமராக வேண்டும் என மோடி நினைக்கிறார். ஆனால் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 20 மாதங்களிலேயே குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
நாங்கள் திராவிடர் கழகத்தில் துறவிகளாக செயல்படுகிறோம். ஆனால் சிலர் காவி துணி அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கருப்பு பணம் மீட்கப்பட்டு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று கூறியதை ஏன் இன்னும் செயல்படுத்தவில்லை.
அ.தி.மு.க.வினர், தமிழகத்தில் ஆட்சியிலிருந்து போகும்போது கடனை வாங்கி கஜானாவை காலி செய்துவிட்டு சென்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும்போது தான், இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் வந்த பிறகுதான் ஆணுக்கு பெண் நிகர் என உரிமை வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் என்றால் அது தமிழகம்தான். பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது என பா.ஜ.க. நினைப்பதற்கு காரணம் மனுதர்மம். பா.ஜ.க. என்று சொல்லக்கூடிய கட்சி ஓட்டுப்போட்டு உள்ளே வர முடியாத கட்சியாக உள்ளது.
அ.தி.மு.க. என்றால் அடமான கட்சியாக உள்ளதால் அதனை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நிறைய மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நீட் தேர்வை தொடர்ந்து கியூட் தேர்வை கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
அதேபோன்று தற்போது ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர்ர் கையெழுத்திட மறுக்கிறார். தேர்தல் என்பது எங்களுக்கு முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறைதான் எங்களுக்கு முக்கியம். வைகுந்த பதவி, சிவலோக பதவி எங்களுக்கு தேவையில்லை. இந்த பூலோக மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் சுப்பராயன், மண்டல தலைவர் பாஸ்கர், செயலாளர் இளம்பரிதி, நகர செயலாளர் பழனிவேல், தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu