ஆவின் பாலகம் கேட்டு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி, பரபரப்பு
பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி மீது தண்ணீரை ஊற்றும் காவல்துறையினர்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெரியதச்சூரை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் தனது மகன் லோகேஸ்வரன்(13), மகள் ஸ்ரீமதி(10) ஆகியோருடன் ஸ்கூட்டரில் வந்தார்.
ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நாகராஜனை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்ரோல் கேன், தீப்பெட்டி ஆகியவற்றை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, நாகராஜன் கூறுகையில், கஞ்சனூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆவின் பாலகம் நடத்துவதற்காக உரிமம் கேட்டு கடந்த 2021-ல் ஆவின் நிர்வாகத்திடம் மனு அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் வேறொருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார்
அதன் பிறகு செஞ்சி மெயின்ரோட்டில் கோழிப்பண்ணை புதூர் பகுதியில் ஆவின் பாலகம் நடத்த உரிமம் வழங்கக்கோரி ஆவின் நிறுவனத்திடம் மீண்டும் மனு அளித்து பல மாதங்கள் ஆகியும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் குடும்பத்துடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறேன். எனவே எனக்கு கோழிப்பண்ணை புதூர் பகுதியில் ஆவின் பாலகம் நடத்த உரிமம் வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைநையடுத்து காவல்துறையினர், இதுகுறித்து ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அரசு அலுவலகத்தின் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி, பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu