கண்டாச்சிபுரத்தில் அமைதியை ஏற்படுத்த சிபிஎம் கோரிக்கை
சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்
வி;ழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் கடந்த 16 ந்தேதி இரு போதை ஆசாமிகளுக்குள் ஏற்பட்ட சண்டை இரு சமூக கலவரமாக மாறி, அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது, அப்பகுதியில் பொது அமைதியை பாதுகாக்க, அப்பாவி தலித் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இது குறித்து சி.பி.எம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 16 ந்தேதி கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இரு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தங்களுக்குள் தாக்கி கொண்டார்கள், ஆனால் குடி போதையில் நடந்த சண்டையை ஒரு சிலர் இரு சமூகத்தினரையும் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர், அதனால் இரு சமூகத்திலும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், அப்பகுதியில் ஒரு வித பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது,
சம்பவம் நடந்த அன்று அப்போது அந்த வழியாக வந்த 4 தலித் இளைஞர்கள் மீது ஒரு சமூகத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர், இதில் அகத்தியன், .சாந்தவேல், ஆகிய இரண்டு பேரும் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்,
தகராறு நடந்த அன்று இருவரும் குடி போதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர், அப்படி செய்யாமல் அப்பொழுதே அவர்களை காவல் நிலையம் இழுத்து சென்று இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருந்தால், அது தனி மனித பிரச்சனையாக இருந்து இருக்கும், காவல்துறை அலட்சிய போக்கால் தற்போது இரு சமூக மோதலாக மாறி, அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது,
இந்த சம்பவத்தில் காவல்துறை காட்டிய மெத்தன போக்கால், இப்போது இரு சமூக மக்கள் பாதிக்கப்பட்டு, பதட்டமாக உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு அப்பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை போக்கும் வகையில் இரு சமூக மக்களையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி, இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும், கலவரத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், மேலும் இனி வரும் காலங்களில் மது போதையில் ரகளையில் ஈடுபதுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், என அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu