மாணவி ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோரிடம் வழங்க நீதிமன்றம் மறுப்பு

மாணவி ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோரிடம் வழங்க நீதிமன்றம் மறுப்பு
X

பைல் படம்

மாணவி ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கையை அவரின் பெற்றோரிடம் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது

மாணவி ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கையை தர பெற்றோருக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையை வழங்க விழுப்புரம் கோர்ட்டு மறுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின் நகலை கேட்டு நேற்று ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் வக்கீல்கள் காசிவிஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, புஷ்பதேவன் ஆகியோர் ஆஜராகினர்.இதையடுத்து அவர்களிடம் மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை, மறுபிரேத பரிசோதனை அறிக்கைகளின் நகலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆர்.) நகலும் வழங்கப்பட்டது. பின்னர், ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை தரும்படி கேட்டதற்கு, தற்போது வழக்கு விசாரணை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க இயலாது என்றும், அந்த ஆய்வறிக்கை வேண்டுமெனில் ஐகோர்ட்டில் முறையிடும்படியும் நீதிபதி புஷ்பராணி கூறினார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். நகல் ஆகியவற்றை மட்டும் பெற்றுள்ளோம். ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கை நகல் வழங்கப்படவில்லை.

ஐகோர்ட்டின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துவிட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று இங்குள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் ஏற்கனவே தொடர்ந்துள்ள ரிட் மனு வருகிற 29-ந் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதால் அன்றைய தினம் ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கை நகல் மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஆகியவற்றை கேட்டு மனுதாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை இன்று ஒப்படைக்கப்படும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையை, பெற்றோரிடம் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!