மாணவர்களிடையே மோதல்; சமாதானப்படுத்திய போலீசார்
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ( மாதிரி படம்)
விழுப்புரத்தில், அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
விழுப்புரம் நகராட்சி, கீழ்பெரும்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் கடந்த 3-ந்தேதி வெள்ளிக்கிழமை விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த போது, வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
உடனே அம்மாணவர், அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தனது அண்ணனிடம் கூற, அவர் தனது நண்பர்கள் சிலருடன் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் சென்று அவர்களை தட்டிக்கேட்டு தாக்கினார். சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் அம்மாணவர்களில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் உறவினர்களான ஜி.ஆர்.பி. தெரு, சேவியர் தெரு, தாமரைக்குளம் பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் உருட்டுக்கட்டை, இரும்புக்குழாய்களுடன் அப்பள்ளியின் அருகில் சென்று அவ்வழியாக வந்த மற்ற மாணவர்கள் மட்டுமின்றி சாலையில் சென்றவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை மார்ச்.4-ந்தேதி விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இரு தரப்பு மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தகுந்த அறிவுரைகளை வழங்கினர். அதோடு மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை கடைபிடிக்குமாறு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடையே சிறு சிறு தவறாக தற்போது ஏற்பட்டு வருகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் காவல்துறை கல்வித்துறை மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்களை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அறிவுரை ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி மாணவருடைய தற்போது பரவி வரும் தகராறு கலாச்சாரம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தீய பழக்கங்களை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu