விழுப்புரத்தில் பாழடைந்து சமூக விரோத செயல் கூடமாக மாறிய சமுதாய நல கூடம்
பாழடைந்துள்ள வழுதரெட்டி சமுதாய நலக் கூடம்
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட து வழுதரெட்டி, இங்கு 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏழை, எளிய மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்துவதற்கு வசதியாக , ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளில் சமுதாய நல கூடம் என்ற இது மாதிரி கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டது, இதன் மூலம் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் முன்பு ஊராட்சியாக இருந்த வழுதரெட்டி, தற்போது நகராட்சி வார்டாக மாறிவிட்டது. தற்போது அப்பகுதியில் உள்ள கோவிந்தசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 2009-2010-ம் நிதியாண்டில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் திறக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இதனை ஆரம்ப காலத்தில் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கட்டுப்பாட்டில் வழுதரெட்டி ஊராட்சியினர் பராமரித்து வந்தனர். அதன் பிறகு வழுதரெட்டி பகுதி, விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த சமுதாய நலக்கூடத்தை நகராட்சி நிர்வாகத்தினர் சரிவர பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இதனால் இந்த சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. பூட்டியே இருப்பதால் இந்த கட்டிடத்தை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களின் அட்டகாசத்தால் சமுதாய நலக்கூடத்தின் கதவுகள், மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்தும் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் அரசின் பணம் வீணாகிறது.
இந்த சமுதாய நல கூட கட்டடத்தை பராமரிப்பு பணி செய்து, மீண்டும் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடக்கும் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா காண்பது எப்போது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி ஓய்ந்து விட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்தை இந்த சமுதாய நல கூடத்தை சரிசெய்து அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க அறிவுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu