விழுப்புரத்தில் கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா

விழுப்புரத்தில் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் கலந்துகொண்டு சீர்வரிசையை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களை வாழ்த்தி அவர்களுக்கான சீர்வரிசையை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் பேசுகையில் கூறியதாவது:-
இதனை ஒரு தலைசிறந்த விழா என்று கூறலாம். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அந்த மனித வளத்தின் இன்றியமையாமையை நமக்கெல்லாம் உணர்த்தும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வளைகாப்பு நடத்த முடியாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அரசாங்கமே இந்த விழாவை நடத்துகிறது என்று இதைக் கருதிவிடக்கூடாது. இது சடங்குக்காக நடத்தப்படுகிற ஒரு விழா அல்ல. கருவுற்ற தாய்மார்களின் ஆரோக்கியம் கருதி அதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதற்காக நடத்தப்படுகிற விழா.
நமது தாய்மார்கள் பொதுவாக தியாகம் உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பட்ட பாடுகள், கஷ்டங்கள் எவரும் மறக்க முடியாது. அவருடைய தியாகத்தை, அவருடைய கஷ்டங்களை வியந்து பேசுகிற நாம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் கொள்ள நாம் மறந்து விடுகிறோம்.
ஒரு தாய் பட்டினி கிடந்து தனது பிள்ளையை வளர்க்கும் போது அவருடைய உடல் நலம் மட்டுமல்ல அந்த குடும்பத்தின் நலனும் பாதிக்கப்படுகிறது. நமது பெண்கள் சத்தான உணவுகளை சமைத்தால் அதை தான் சாப்பிடாமல் அவற்றைத் தனது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ கொடுப்பார்கள். அப்படி அவர்கள் செய்வதால் பாதிக்கப்படுவது அவரது ஆரோக்கியம் மட்டுமல்ல அந்த குடும்பமும்தான். ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருப்பவர் அம்மாதான். அவர் உடல் நலம் குன்றி நொடித்துப்போனால் அந்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, நமது தாய்மார்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான தாய்மார்களை, ஆரோக்கியமான குழந்தைகளைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம் தான் மனித வளத்தில் தலைசிறந்த சமூகமாகத் திகழ முடியும். இதை உணர்ந்துதான் நம்முடைய முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியை நடத்த வழிகாட்டி இருக்கிறார்
கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலத்திலே என்னென்ன சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் , கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் , குழந்தை பிறந்ததற்குப் பிறகும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் இங்கே நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக விளக்கிக் கண்காட்சியாக அமைத்திருக்கிறார்கள்.
இந்திய அளவில் எடுக்கப்பட்ட நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே விவரங்களைப் பார்த்தால் இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் போதுமான சத்து இல்லாத காரணத்தினால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தேசிய அளவைவிட தமிழ்நாட்டின் நிலை சற்றே பரவாயில்லை என்றாலும்கூட இங்கேயும் அத்தகைய சத்துக் குறைவான தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர்களின் நலன் கருதியே இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டமும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 100 சதவீத பிரசவங்களும் வீடுகளிலே நடைபெறவில்லை மருத்துவமனைகளில்தான் பாதுகாப்பான முறையிலே, சுகாதாரமான முறையிலே நடைபெறுகின்றன என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு செய்தியாகும். அதனால் மகப்பேறு என்பது ஆபத்து இல்லாத ஒன்றாக இப்போது ஆக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள் மீது தமிழக முதலமைச்சர் காட்டும் அக்கறையை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கருவுற்ற தாய்மார்களாகிய உங்கள்மீது எந்த அளவுக்கு அக்கறையோடு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த அரசும் அக்கறையோடு இருக்கிறது, என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த விழா அமைந்துள்ளது. இந்த விழாவின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு சத்தான உணவை நீங்களெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று, இந்த நாடு வளம் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று உங்களையெல்லாம் வாழ்த்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu