மஞ்சப்பை விருது பெற வாருங்கள்: விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் பள்ளி- கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் மஞ்சப்பை விருது "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில் 2022-2023 நிதியாண்டிற்காக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்றுப்பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களை தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்.
மாநில அளவில் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். அதோடு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம், 3-வது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்விருதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்க உள்ளது.
இவ்விருதிற்கான விண்ணப்ப படிவங்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர், துறைத்தலைவர் கையொப்பமிட வேண்டும், விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் (சி.டி, பென்டிரைவ்) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம்- 605 602 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu