விழுப்புரம் மாவட்ட கல்லூரி முதல்வர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்ட கல்லூரி முதல்வர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் யாரும் விடுபடாதவாறு பயன்பெற உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கும் வழங்குவது குறித்து கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 56 கல்லூரிகளை சேர்ந்த 4,109 மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 93 லட்சத்து 8 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலாமாண்டு மாணவிகள் மற்றும் முதல்கட்டத்தில் விடுபட்ட மாணவிகள்(https://www.pudhumaipenn.tn.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

கல்லூரி முதல்வர்கள், தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி நிறுவனங்களின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெறும். முதலாவதாக 11-ந் தேதி வரையும், இரண்டாவது சிறப்பு முகாமானது நவம்பர் 12 முதல் 18-ந் தேதி வரை அந்தந்த கல்லூரிகளின் மூலம் நடைபெறும்.

மாணவிகள் அனைவரும் நவம்பர் 18-ந் தேதிக்குள் தவறாமல் தங்களுடைய ஆதார் அட்டை, தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம், (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள், முதல் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எவரும் விடுபடாத வகையில் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சரியான வழிகாட்டுதல்களை வழங்கி இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற கல்லூரி முதல்வர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!