ஊட்டச்சத்து மையங்களில் தோட்டம் அமைக்க ஆட்சியர் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் ஊட்டச்சத்து மையங்கள் செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.
கடந்த 8 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களுக்கான திட்டம் சார்ந்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 1,781 அங்கன்வாடி மையங்களில் 13,365 கார்ப்பிணி பெண்களும் 10,168 பாலூட்டும் தாய்மார்களும் 1,00,322 (0-6 வயது) இணை உணவு பெறும் குழந்தைகளும், 43,897 மதிய உணவு பெறும் குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சி நிலையை வயது வாரியாக ஆய்வு செய்ததுடன், அதில் காணை, கோலியனூர், மைலம், திருவெண்ணைநல்லூர் ஆகிய வட்டாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
மேலும், கர்ப்பிணி பெண்களிடையே காணப்படும் இரத்தசோகை குறித்த ஆய்வில் மரக்காணம் வட்டாரத்தில் இரத்தசோகை உடைய கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பான, சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழ்நிலையில் முன்பருவ கல்வி பயில ஏதுவாக மையங்கள் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தியதுடன், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க இடவசதி உள்ள அனைத்து மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் மருத்துவ பரிந்துரை செய்த அனைத்து குழந்தைகளையும் TNICDS APP செயலியில் 100% பதிவேற்றம் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu