மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு ஆட்சியர் அஞ்சலி

மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு ஆட்சியர் அஞ்சலி
X
மூளைச்சாவு  அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையொட்டி அவரது உடலுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரத்தில் மூளை சாவு அடைந்ததால் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவர் 07.09.2022 அன்று மாலை 4.20 மணியளவில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சுய நினைவு இல்லாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னர் மயக்கவியல் துறை, நரம்பியல் துறை, பொதுமருத்துவ துறை,ஆகிய வல்லுநர்கள் கொண்ட குழு மேற்கொண்டபரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கை மூலமாகவும் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதையொட்டி, அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று 09.09.2022 காலை 5.30 மணியளவில் உடல் உறுப்பு மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல், இரண்டு கருவிழி அகற்றப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் இடத்திற்கு வழங்கப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதன் மூலம் 8 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உடல் உறுப்பு மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உறுப்பினர் மற்றும் செயலாளர் அவர்களின் வாழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் குந்தவிதேவி, மருத்துவ கண்காணிப்பாளர் செந்தில் குமார், நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மயக்கவியல் துறை நிபுணர்கள் தீப்தி, அருண்சுந்தர், அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் பாண்டியன், மரு.லட்சுமி நாராயணன், பொது மருத்துவத் துறை மருத்துவர்கள் சுப்ரமணியன், தரணேந்திரன், தமிழ்குமரன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உடல் உறுப்பு மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!