மதிப்புக்கூட்டும் சேவை மையங்கள் அமைக்க ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம் கலெக்டர் மோகன்.
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டும் இயந்திர சேவை மையங்கள் மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22 ஆம் ஆண்டு செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்க ரூ.10.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று இலாபம் பெற முடியும். மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம். நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம், செக்கு இயந்திரம்,வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் இயந்திரம், மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவை உள்ளன.
இவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்த வகை. இயந்திரங்கள் எவ்வளவு எண்கள் தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்கலாம்.
இதற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மானிய விலையில் அமைத்திடவும், மற்றும் விவரங்கள் அறிந்திட கீழ் காணும் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அணுகி பயன்பெறலாம்.
விழுப்புரம், வானூர் மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களில் உள்ள விவசாயிகள்
உதவி செயற் பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப்பொறியியல் துறை,
27/1209, பெரியார் தெரு,வழுதரெட்டி,விழுப்புரம். தொலைபேசி எண்.04146 258951 என்ற முகவரியிலும்
திண்டிவனம் மற்றும் செஞ்சி வட்டம் விவசாயிகள்
உதவி செயற் பொறியாளர்(வே.பொ),
வேளாண்மைப்பொறியியல் துறை,
டான்வா குடியிருப்பு வளாகம்,
மரக்காணம் ரோடு, மானூர்,
திண்டிவனம் 604 002 தொலைபேசி எண்.04147-294486 என்ற முகவரியிலும் நேரில் சென்று தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu