விவசாயிகள் நெல் விற்பனையை இணையதளத்தில் பதிவு செய்ய கலெக்டர் அறிவிப்பு

விவசாயிகள் நெல் விற்பனையை இணையதளத்தில் பதிவு செய்ய கலெக்டர் அறிவிப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

இடைத்தரகர்கள் குறிக்கீடு மற்றும் நேரம் வீணாவதை தவிர்க்க நெல் விற்பனையை இணைய தளத்தில் பதிந்து விற்பனை செய்ய கலெக்டர் அறிவிப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விவசாயிகள் இணையவழிமூலம் பதிவு செய்ய கலெக்டர் த.மோகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் அரசாணை நிலை எண்.60 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நாள் 16.07.2021-ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற உள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் வீணாவதை தவிர்ப்பதற்கும், கொள்முதல் நிலையத்தில் உள்ள பணியாளர்கள், தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை தடுப்பதற்கும், நெல் விற்பனையில் இடைத்தரகர்களின் தடையீட்டை நீக்குவதற்கும், விவசாயிகள் தங்களது பெயர்,ஆதார் எண்,புல எண்,வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு,நெல் விற்பனை செய்ய ஏதுவாக கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

e-PDC இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும் நாளிலிருந்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) www.tncsc.tn.gov.in,www.tncsc-edpc.in ஆகிய இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர்,நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம்.

இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்,மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!