மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதானவர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல்

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதானவர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல்
X
சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 5 பேரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்

பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான தாளாளர் உள்பட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். அவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த 17-ந்தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கொந்தளிப்பாக மாறி கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இதனிடையே மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture