தற்காலிக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
விழுப்புரம் கலெக்டர் மோகன்
விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வரும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த வாரியத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தூய்மை மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படை தினக்கூலி தொகுப்பூதியம் பெறும் தூய்மைப் பணியாளா்கள் தற்காலிக உறுப்பினா்களாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டை பெற்ற உறுப்பினா்களுக்கு நலவாரியத்தின் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்கள் இறந்தால் ரூ.5 லட்சமும், கை, கால், கண் பாா்வை இழந்தால் ரூ. 1 லட்சமும், இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.20 ஆயிரமும், முதியவா் உதவித் தொகையாக மாதம் ரூ.1,000-மும் வழங்கப்படும். கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளா்கள் அனைவரும் தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உடனடியாக உறுப்பினராக பதிவு செய்து பயனடையலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu