உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு

உயிர் காத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுக்கு அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் உயிர்களை காப்பாற்றிய இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை செய்த, உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களை காத்த நபர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா, உத்தம் ஜீவன் ரக்‌ஷா மற்றும் ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானமிக்க பணிகளை தாமதமின்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயமடைந்தவர்கள், மின் விபத்துகளில் சிக்கியவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்க விபத்துக்களில் சிக்கியவர்கள் ஆகியோரை உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

வீர சேவைபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதத்திலும், இவர்களைப்போல் மற்றவர்களும் ஆபத்துக்காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் விதத்திலும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கள், ஆபத்துக்காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்களை காத்து விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் ஆயுதப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி சேவைத்துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!