12 மாவட்டங்களில் பாஜக வளர வேண்டும்; பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அறிவுறுத்தல்
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா.
‘தீய சக்திகளை களைய வேண்டும் என்றால், 12 மாவட்டங்களில் பா.ஜ.க. வளரவேண்டும்,’ என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திண்டிவனத்தில் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து,எச்.ராஜா வருகையை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திருமாவளவன் உருவப் படத்தை எரிக்க முயன்றதால், பா.ஜ.க.வினர் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனா்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த எச்.ராஜாவை, கடலூர் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து, கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
விழுப்புரத்தில் தங்கியிருந்த எச்.ராஜா மயிலம் அருகே உள்ள பாலப்பட்டில் புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில், பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்து, அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டார்கள். காவல்துறையினர் என்னை தொடர்பு கொண்டு பொதுக்கூட்டத்துக்கு வரவேண்டாம். உங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறினர். இருப்பினும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர். காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர். யார் மீது போட வேண்டும் என்று முடிவு செய்கிற அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களிலும், வந்து ஆய்வு செய்தால் மட்டுமே எந்த அளவிற்கு மாவட்ட நிர்வாகங்களை வி.சி.க.வினர் மாற்றி உள்ளார்கள் என்று தெரியவரும். பா.ஜ.க. கூறியபடி அனைத்து இடங்களிலும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். எனவே இந்த தீய சக்திகளை களைய வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் பா.ஜ.க. வளர வேண்டும் என, அவர் தெரிவித்தார். அப்போது பாஜக மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu