அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதாத்தில், அரசு பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கைக்கான பெற்றோர்கள் ஆர்வம் காட்டிடுவதற்கான 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், தலைமை தாங்கி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடப்பாண்டில் அதிகளவு மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தற்பொழுது அரசு பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை வேலையிலும் சிற்றுண்டி வழங்கப்படும். அரசு பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், பெண் கல்வி இடை நிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதுபோல் எண்ணற்ற திட்டங்களை அரசு வழங்கி வருகின்றன. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து அரசு திட்டங்களை பெற்று பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர் மா.பாபுசெல்வதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu