விழுப்புரம் மாவட்டத்தில் கணக்கு தணிக்கை குழு ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தொகை தலைமையில் கணக்குப் பொது தணிக்கை குழு விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
Villupuram Today News -கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.38.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் அந்த குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் விழுப்புரம் வருகை தந்து அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர் விழுப்புரம் அருகே கப்பூர் ஆதிதிராவிடர் நல விடுதி, தகைசால் பள்ளியாக தேர்வாகியுள்ள விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டனர்.
அதன் பிறகு அக்குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரூ.38.94 கோடி இழப்பு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2018-19-ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்துக்கு வாங்கப்பட்ட கருவிகள், உபகரணங்களை சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாததால் ரூ.26 கோடியே 88 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வராத வகையில் ரூ.11 கோடியே 52 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர 1 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் இங்கு ரூ.3 லட்சம் கொடுத்து சூரிய மின் கலனை கொள்முதல் செய்துள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ரூ.54 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே தளவானூரில் 2020-21-ல் ரூ.22 கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு, பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு 3 மாதங்களிலேயே சேதமடைந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் அதுவும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இழப்புகளுக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் காரணம். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி இல்லை என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். உடனடியாக அந்த சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், நகராட்சி சேர்மன் தமிழ்ச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu