விக்கிரவாண்டி அருகே மனைவியுடன் தகராறு: மாமியார் வீட்டுக்கு தீ வைப்பு

விக்கிரவாண்டி அருகே மனைவியுடன் தகராறு: மாமியார் வீட்டுக்கு தீ வைப்பு
X

கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன்.

விக்கிரவாண்டி அருகே மாமியார் வீட்டிற்கு தீ வைத்து எரித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 28). விவசாயி. இவருக்கும் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி(27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பிரியா என்ற மகளும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி ஏற்படுவது உண்டாம். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சீதாலட்சுமி சித்தணியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் சித்தணியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று சீதாலட்சுமியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சீதாலட்சுமி வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வியாழக்கிழமை மாலை யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சீதாலட்சுமியின் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது பற்றி சீதாலட்சுமி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்த முத்து வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார்.

பின்னர் பாலகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!