வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் கலெக்டர் மோகன்
விழுப்புரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பாடுபட்ட 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அதற்கான மாநில விருது ஒன்றை தமிழக அரசு அறிவித்து 2017ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இதையடுத்து ஆண்டுதோறும் சிறந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் தேதி பாராட்டு பத்திரம், ரூபாய் 1 இலட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. எனவே நடப்பாண்டு மாநில விருது வழங்க 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.
விருதுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24ம் தேதி மாநில விருது வழங்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu