விக்கிரவாண்டி அருகே அன்பு ஜோதி காப்பக நிர்வாகி கைது- காப்பகத்திற்கு சீல்

விக்கிரவாண்டி அருகே அன்பு ஜோதி காப்பக நிர்வாகி கைது- காப்பகத்திற்கு சீல்
X

கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி ஜூபின்பேபி

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பகத்தின் நிர்வாகியை கைது செய்து காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆதரவற்றோர் சித்ரவதை, பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விக்கிரவாண்டி அருகே உள்ள அன்பு ஜோதி காப்பக நிர்வாகியை போலீசார் கைது செய்து, காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆஷ்ரமம் என்ற பெயரில் ஒரு காப்பகம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு சித்ரவதை, பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அரசு அதிகாரிகள், போலீசார் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி காப்பகம் நடைபெற்று வந்ததும், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியதோடு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், காப்பகத்தில் இருந்த 17 பேர் மாயமாகியிருப்பதும், உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் அம்பலமானது. இதையடுத்து காப்பகத்தில் தங்கியிருந்த 143 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி அவரது மனைவி மரியா ஜூபின், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை சேர்ந்த காப்பக மேலாளரான பிஜூமோகன், காப்பக பணியாளர்களான விழுப்புரம் அயினம்பாளையத்தை சேர்ந்த பூபாலன், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நாராயணபுரத்தை சேர்ந்த முத்துமாரி, விக்கிரவாண்டி அருகே விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத், நரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தாஸ், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ் ஆகிய 8 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அகிலா வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் காப்பக நிர்வாகி ஜூபின்பேபியிடம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜூபின்பேபியை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அகிலா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜூபின்பேபியை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!