முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய முதியவர்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய முதியவர்
X

தான் யாசகமாகப் பெற்று சேர்த்து வைத்திருந்த  பத்தாயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு   விழுப்புரம் ஆட்சியரிடம் வழங்கிய முதியவர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவர் தான் யாசகம் பெற்ற ரூ10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்

யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவருக்கு பொதுமக்கள் பாராட்டு குவிந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (73). யாசகம் (பிச்சை) எடுப்பதை வாடிக்கையாக கொண்ட இவர் தான் யாசகம் எடுக்கும் பணத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தன்னா இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்.

மேலும், கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கான நிவாரணம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி என பணத்தை அனுப்பி வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் சென்றார். அப்போது அவர்கள் அந்த பணத்தை வங்கி மூலமாக அரசு நிதியில் நேரடியாக செலுத்துமாறு அறிவுறுத்தியதன்பேரில் அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை 35 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டு வருகிறேன். இதுவரை 400 பள்ளிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், கேமரா, நோட்டு- புத்தகம், நாற்காலிகள் ஆகியன வழங்கியுள்ளேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், கொரோனா நிதி கொடுத்ததற்காக எனக்கு பாராட்டு சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. பல்வேறு அதிகாரிகளிடமும், சமூக அமைப்புகளிடமும் பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளேன். இன்னும் செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில்தான் நிவாரண நிதி அளிக்க வேண்டியுள்ளது. எனது இறுதி வாழ்க்கை முடியும் வரை இந்த சேவை பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார். இவருடைய இந்த சேவைப்பணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பலரும் பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!