விழுப்புரத்தில் செயல்பட துவங்கியது மாலை நேர உழவர் சந்தை

விழுப்புரத்தில் செயல்பட துவங்கியது மாலை நேர உழவர் சந்தை
X

விழுப்புரத்தில் மாலை நேர உழவர் சந்தை செயல்பட தொடங்கி உள்ளது.

விழுப்புரத்தில் மாலை நேர உழவர் சந்தை சோதனை அடிப்படையில் செயல்பட தொடங்கி, காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் மாலைநேர உழவர் சந்தை செயல்பட தொடங்கி உள்ளது.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை, தற்போது கூடுதலாக மாலை நேர உழவர் சந்தையாகவும் செயல்பட தொடங்கி உள்ளது. விழுப்புரம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விழுப்புரத்தில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் பொலிவிழந்த நிலையில் காணப்பட்ட உழவர் சந்தை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டதோடு அங்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பெரும்பாலான உழவர் சந்தைகளை மதியம் 1 மணிக்கெல்லாம் மூடுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். அதுபோல் மாலை நேர உழவர் சந்தையை திறந்தால் வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், காய்கறிகளை வாங்கிச்செல்ல வசதியாக இருக்கும் என்பதால் மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் உழவர் சந்தைகள் மாலை நேரத்திலும் செயல்படுவது குறித்து அரசு சார்பில் சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சோதனை முறை அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தையில் மாலை நேர விற்பனையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் உழவர் சந்தை வெள்ளிக்கிழமை முதல் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை செயல்பட தொடங்கியுள்ளது.

இதனால் விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழ வகைகளை மாலை நேரத்திலும் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில் தற்போது சோதனை அடிப்படையில் மாலை நேரத்தில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியுள்ளன. மாலை நேரத்திலும் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். எனவே விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், அவர்கள் வாழ்வில் வளம்பெறவும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க வர வேண்டும். பொதுமக்களின் வருகையை பொறுத்தும், அரசின் அறிவுறுத்தலின்படியும் மாலை நேரத்தில் தொடர்ந்து உழவர் சந்தைகள் செயல்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business