காவல்துறையை கண்டித்து விழுப்புரத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை பாலியல் வன் புணர்ச்சி செய்த குற்றவாளி பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், விநாயகபுரத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த 21 வயது மாற்றுத்திறனாளியை கடந்த 27-07-2022 அன்று நள்ளிரவு சுமார் 12-00 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் உறவினரான பிரபு என்கிற வழக்கறிஞர் பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்துள்ளார்.
இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், நடவடிக்கை கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர், அதனையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் வலியுறுத்தலின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளி பிரபு மீது வழக்கு பதிந்தனர்.
ஆனால் வழக்கு பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையில் குற்றவாளி பிரபுவை கைது செய்யவில்லை. அதனால் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக பாலியல் குற்றவாளியான பிரபுவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கே.தமிழ்செல்வி, பி.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர், ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன், .கீதா, ராதாகிருஷ்ணன், சங்கரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, செஞ்சி ஏ.சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளி இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளி பிரபுவை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்,
ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu