'அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்' - மாஜி அமைச்சர் சண்முகம் 'ஆரூடம்'

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் - மாஜி அமைச்சர் சண்முகம் ஆரூடம்
X

முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம்.

'தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்' என, விழுப்புரத்தில் நேற்று, முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக செயல்படாமல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஆனால் ஆளும் தி.மு.க.வின் 13 அமைச்சர்கள் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் 10, 15 ஆண்டுகளாக அவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வழக்குகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டாமல், அவ்வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் நீர்த்துபோக செய்கிற பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்றைக்கு தி.மு.க.வின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். எங்கள் ஆட்சியின் கீழ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படும். இதே அதிகாரிகள்தான் பணியாற்றுவார்கள். ஆகவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. அமைச்சர்களை, உச்சநீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கருணாநிதிக்கு பிறகு அந்த கட்சியில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் என, தகுதி, திறமை உள்ளவர்கள் இருந்த நிலையில், .ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இதுதான் வாரிசு அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!