அதிமுக வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெற கூடாது: ஸ்டாலின் காட்டம்

அதிமுக வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெற கூடாது: ஸ்டாலின் காட்டம்
X
பாஜக பிரதிநிதிகளாக செயல்பட போகும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெற கூடாது என ஸ்டாலின் பிரச்சாரம்.

விழுப்புரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில், திமுக வேட்பாளா்கள் க.பொன்முடி (திருக்கோவிலூா்), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), விசிக வேட்பாளா் வன்னியரசு (வானூா் -தனி) ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் சி.வி.சண்முகம், தனது பதவியை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளில், இந்த மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலின்போது, நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் பழனிசாமியும், அமைச்சா் சண்முகமும் வாக்குறுதி அளித்தனா். ஆனால், செயல்படுத்தவில்லை. விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போது, விரிவாக்கப்பட்ட புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தும் அதை செய்யவில்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையும் ஒரே மாதத்தில் உடைந்தது.

நீட் தோ்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு இதுவரை முதல்வா் பழனிசாமியும், சட்டத் துறை அமைச்சா் சண்முகமும் ஒப்புதல் பெற்றுத் தரவில்லை. அந்த தீா்மானத்தை குடியரசுத் தலைவா் திருப்பி அனுப்பியபோது, அதுகுறித்து பேரவைக்கு அமைச்சா் சண்முகம் தெரிவிக்கவில்லை.

விவசாயிகளை விமா்சித்த முதல்வா்: கேரளம், புதுவை, பஞ்சாப் மற்றும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் கூட மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை. தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை இடைத்தரகா்களின் போராட்டம் என விமா்சித்தவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பேரவையில் வேளாண் சட்டத்துக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்படும்.

மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற ஒரே அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத், மக்களவையில் பாஜக பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். எனவே, இந்தப் பேரவைத் தோ்தலில் ஒரு சில இடங்களில் அதிமுகவினா் வெற்றிபெற்றாலும், அவா்களும் பாஜக பிரதிநிதிகளாகவே பேரவையில் செயல்படுவா். எனவே, அதிமுக வேட்பாளா் ஒருவா் கூட வெற்றிபெறக்கூடாது என்றார் மு.க.ஸ்டாலின்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!