விழுப்புரத்தில் நகராட்சி வரி கட்டாத கடைகள் மீது நடவடிக்கை
நகராட்சி வரி செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஆக மொத்தம் ரூ.17 கோடியே 71 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது.
இதனால் நகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், காமராஜர் தெரு, திரு.வி.க. சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வருவாய் அலுவலர் ரவி, வருவாய் உதவியாளர் கோவிந்தன், பணி ஆய்வாளர் ஹரிகரன் ஆகியோர் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் சொத்து வரியாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்து 619-ம், குடிநீர் இணைப்பு கட்டணமாக ரூ.78,250-ம், குத்தகை இனங்களாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 745-ம், தொழில் வரியாக ரூ.8,750-ம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணமாக ரூ.57,440-ம், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக ரூ.62,130-ம் ஆக மொத்தம் ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 934 வசூல் செய்யப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்தில் 6 மாதமாக வரி பாக்கி செலுத்தாமல் இருந்த ஒரு பூக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுதவிர குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்த 32 பேரின் இணைப்புகளையும், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்த 34 பேரின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் விழுப்புரம் நகராட்சி நிதி நிலையில் சிக்கலான நிலையில் இருந்து வரும் வேளையில் இது போன்று விழுப்புரம் நகராட்சியில் வரி கட்டாமல் வாடகை கொடுக்காமல் இருப்பவர்களிடம் தொடர் நடவடிக்கையாக நகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட்டு வசூலிக்க வேண்டும் அப்படி பாக்கி வரியை கட்டாதவர்களை தற்போது குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை துண்டிப்பது போல் துண்டிக்க வேண்டும் மேலும் வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu