ரயில்வே வேலை மோசடி ஒருவர் கைது: 3 பேர் தலைமறைவு
பைல் படம்
ரயில்வே வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த ஒரு நபரைக் கைது செய்த போலீஸார் தொடர்புடை 3 பேரை தேடி வருகின்றனர்.
ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.18¾ லட்சத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவரை கைது செய்து, தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் பாபுராஜ். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சக்திவேல், பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார், பங்களாப்பேட்டை சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பாபுராஜிடம் சென்று தங்களுக்கு தெரிந்த சென்னை நங்காநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர் பலருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும், உங்களுக்கும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் வேலை வாங்கித்தர ஏற்பாடு செய்வார் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பாபுராஜ் மற்றும் அவருக்கு தெரிந்த ராமலிங்கம், தேவி, மகாலிங்கம், சுந்தரவள்ளி ஆகியோர் சக்திவேல், ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஹரிகுமாரை சந்தித்து வேலை வாங்கித்தருமாறு கூறினர். இதற்காக அவர்கள் மொத்தம் ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்தனர். அதனை பெற்ற ஹரிகுமார், சக்திவேல், ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் மேற்கண்ட 5 பேருக்கும் ரெயில்வே துறையில் வேலை ஏதும் வாங்கித் தராமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்து வந்தனர்.
இதுகுறித்து பாபுராஜ், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஹரிகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் புதன்கிழமை ஜெயக்குமாரை (35) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu