விழுப்புரம் அருகே மனநல காப்பகத்தில் சித்திரவதை: பரபரப்பு
குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்கள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களை கடத்தி சென்று விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து ஆசிரம நிர்வாகியின் மனைவி உட்பட மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் நிர்வாகியின் மனைவி உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களை கடத்தி சென்று விற்பனை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருப்பது மேலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம் இயங்கி வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்று சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு, திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்தார். இதன்பின்னர் ஹனிதீன் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.
அப்போது தான் ஆசிரமத்தில் சேர்த்தவாின் நிலை என்ன என்பது குறித்து அறிய ஹனிதீன் நேரில் பார்க்க சென்றார். அப்போது, ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி இடப் பற்றாக்குறையால் பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஜாபருல்லாவை இடமாற்றம் செய்துள்ளோம். அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார். அவர் கூறியபடி அங்கு சென்று பார்த்தபோது, ஜாபருல்லாவை காணவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் குண்டலப்புலியூர் வந்து, கேட்டார். அப்போது, ஆசிரமத்தினா் இங்கிருந்து 50 பேர் மாயமாகி விட்டனர். அதில் ஜாபருல்லாவும் ஒருவர் என்று தெரிவித்தனர். ஆசிரமம் தரப்பில் அளித்த பதில்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இது தொடர்பாக கெடார் காவல்நிலையத்தில் ஹனிதீன் புகார் அளித்தார். ஆனால் அங்கு புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவு படி, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் கடந்த 10-ந்தேதி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பணியாளர்கள் 27 பேர் உள்பட சுமார் 150 பேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கெடார், ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு அளித்த புகாரில் மனநல காப்பகம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தனிநபரின் விருப்பம் இல்லாமல், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மொட்டை அடித்து, உடல் ரீதியாக அசிங்கப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத வகையில், வெளியே விடாமல் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு, சரியான மருத்துவ சிகிச்சை, உரிய உணவு வழங்காமல் இருந்துள்ளனர். பெண்களை அடித்து கொடுமை படுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மேலும் அங்கு உள்ளவர்களை வியாபார ரீதியாக வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஆசிரமம் மீது சந்தேகம் எழுகிறது. அரசு விதிமுறைகளை பின்பற்றாமலும், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த விஜி மோகன்( 46), பணியாளர்கள் நாரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், பெரியதச்சூர் விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத் (24), தென்காசி முத்துமாரி (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்தல், உள் நோக்கத்தோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில், மேலாளர் விஜி மோகன், ஊழியா்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் இவர்கள் இருவரையும் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உடல்நலம் சரியானதை அடுத்து, மரியாஜூபின் புதன்கிழமை மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மரியாஜூபினை கைது செய்து, விசாரணைக்காக கெடார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதேபோன்று, ஆசிரமத்தில் பணியாளராக பணியாற்றி வந்த விழுப்புரம் அருகே அயனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபாலன்(34), தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ்(35), கேரளா மாநிலம் பாலக்காடு தாஸ்(75) ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டனர் இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என்று மொத்தம் 142 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பிரச்சினைக்குரிய ஆசிரமத்தை சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu