மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற  3 பேரை  தடுத்து நிறுத்தி விசாரித்த போலீஸார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு திங்கள்கிழமை 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு அளிக்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்டது மழவந்தாங்கல் கிராமம், இக்கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி மனைவி ராஜலட்சுமி (வயது 35) என்பவர் தனது மகள் பிரியதர்ஷினி (16), மகன் பிருதிவிராஜ் (16) ஆகியோருடன் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர், திடீரென தான் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திறந்து தன் மீதும், தனது மகள், மகன் மீதும் ஊற்றிக்கொண்டு 3 பேரும் தீக்குளிக்க முயன்றனர். இதனை எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவர்கள் மீது முன்எச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜலட்சுமி கூறுகையில், தனது கணவருக்கும், அவரது தம்பி செந்திலுக்கும் பொதுவாக உள்ள 10 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்யக்கோரி செந்திலிடம் பலமுறை முறையிட்டும் மறுத்து வருகிறார். அதோடு எங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் மறுத்து இடையூறு செய்து வருகிறார்.

இதுகுறித்து பலமுறை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை மேலும் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முறையிட்டார்.

இதனை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பல நேரங்களில் குறைகள் தீர்க்கப்படாத காரணத்தினால் சிலர் தீக்குளிப்பு உள்ளிட்ட தற்கொலை முயற்சி ஈடுபடுவதால் அங்கு அப்பொழுது ஒரு பதட்டமான பரபரப்பு ஏற்பட்டு வருகிறது,

இதற்கு காரணம் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வருபவர்கள் கீழ் மட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் சுணக்கம் காட்டி பலமுறை அந்த மனுதாரர்களை அலட்சியப்படுத்தி அலைய விடுவதால் வெறுத்துப் போய், விரக்தி அடைந்து இது போன்ற முடிவுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு குறை சார்ந்த மனுக்களை எழுதி கொடுக்கும் சில நபர்கள் உடனடி நடவடிக்கை கிடைக்கும் என்ற பொய்யான தகவலுடன் பொய் வார்த்தைகளை கூறி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட தூண்டிவிட்டு அவர்களிடம் பணம் பறித்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவதோடு, இது போன்ற தவறான தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!