விழுப்புரம் அருகே பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் அருகே பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
X

விழுப்புரம் நீதிமன்றம் (கோப்பு படம்)

விழுப்புரம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தன்னை விதித்து தீர்ப்பளித்துள்ளது

மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளையடித்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சவக்குழி தோண்டல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த தடுத்தாட்கொண்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி ரமா (வயது 37). கடந்த 28.11.2015 அன்று அதே கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்ததால் மறுநாள் 29.11.2015 அன்று இறுதிச்சடங்கு நடந்தது. பின்னர் அவரது உடலை அங்குள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக அன்று பகல் 12.30 மணியளவில் தடுத்தாட்கொண்டூர் கண்ணகி வீதியை சேர்ந்த கூத்தான் மகன் முருகன் (39), பாண்டியன் வீதியை சேர்ந்த வீரன் மகன் ராஜேந்திரன் (45), தாட்கோ குடியிருப்பு முதல் தெருவை சேர்ந்த பெரியான் மகன் சீனுவாசன் (35) ஆகியோர் மண்வெட்டியுடன் வந்து சவக்குழி தோண்டினர்.

பெண் கொலை

அதன் பிறகு அவர்கள் 3 பேரும் மதியம் 1.15 மணியளவில் அங்குள்ள அரிநாராயணன் என்பவருடைய நிலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரமா, மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தனியாக மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்த முருகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ரமாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் ரமாவிடம் சென்று நைசாக பேச்சுக்கொடுத்தனர். பின்னர் அவர்கள் மண்வெட்டி மற்றும் இரும்புக்கம்பியால் ரமாவை சரமாரியாக தாக்கினர். இதில் ரமா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்ததும், அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ரமாவின் உடலை அங்குள்ள கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், ராஜேந்திரன், சீனுவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

3 பேருக்கு ஆயுள் சிறை






இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், ராஜேந்திரன், சீனுவாசன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன் உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story