விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது

விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது
X

மரியபிரபாகரன்.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி நிறுவன ஊழியர் கொலையில் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (வயது 32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரியபிரபாகரனை அவரது நண்பர்களான விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை தெற்கு காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் பாலா என்கிற பாலமணி (23), பவர்ஹவுஸ் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் குகன் (24), விழுப்புரம் பாணாம்பட்டு பாதை அரவிந்த் நகரை சேர்ந்த மோகன் மகன் வல்லரசு (22) ஆகியோர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகள் 3 பேரையும் பிடிக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெளியூருக்கு தப்பிச் செல்ல விழுப்புரத்தில் பதுங்கியிருந்த பாலா என்கிற பாலமணி, குகன், வல்லரசு ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரன், தனது வேலை விஷயமாக பணம் வசூலிக்க செல்லும் இடமெல்லாம் நண்பர்களான பாலா உள்ளிட்ட 3 பேரையும் உடன் அழைத்து செல்வார். அதோடு 4 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் மரியபிரபாகரன் 3 பேரையும் ஒருமையில் திட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் 3 பேருக்கும் மரியபிரபாகரன் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் மரியபிரபாகரன், தனது நண்பர்களான பாலா, வல்லரசு, குகன் ஆகியோருடன் விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகே முட்புதரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாலா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி மரியபிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். உடனே குகனும், வல்லரசுவும் மரியபிரபாகரனின் கை, கால்களை பிடிக்க, பாலா தான் வைத்திருந்த கத்தியால் மரியபிரபாகரனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார். அவர் இறந்ததும் அங்கிருந்து 3 பேரும் தப்பியோடி விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலா, குகன், வல்லரசு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!